Saturday, November 21, 2009

வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்

மூலம்: எஸ். குருமூர்த்தி

தமிழில்: ஆழிநோக்கி


வால்மார்ட் போன்ற சில்லறை வர்த்தகத்தில் (retail business) முன்னணியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக நுழைய தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை ஒருவகையில் வழிவகுத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இது தேசியப்பொருளாதாரத்திற்கும் சமூக நலனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்களே நொறுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து அவற்றைக் காப்பாற்ற இந்த அரசு உதவுவது வெட்கங்கெட்ட செயலாகும்.
இந்தியாவில் சில்லறை வர்த்தகம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்தியாவில் அதைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டால் சமூகப் பதற்றம் விஸ்வரூபம் எடுக்கும். வெளிநாடுகளிலேயே மூலதனம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மூலதனத் திரட்சியில் 20% மட்டுமே இந்த ஆண்டு இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகள் கரன்சி அச்சடித்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் வாங்கியும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளித்து வரும் நிலையில் இந்த முடிவு அனாவசியமானதாகும்.
இந்தியாவில் சில்லறை வியாபாரம் அமைப்பு சாரா நிலையில் உள்ளது. இது பாரம்பரியமானது. சமூகம் சார்ந்தது. செலவு குறைவானது. உழைப்பு செறிவு மிக்கது. இது வெறும் பெட்டிக்கடைகள், பீடா கடைகள், பலசரக்கு கடைகள் என்று மட்டும் நின்று விடவில்லை. கைவண்டிகளில், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களும் இதில் அடங்குவார்கள். ஒரு கடையில் ஒரு குடும்பத்தினரே உழைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக உள்ளார்கள். இதை சமூக மூலதனம் எனலாம். உதாரணமாக குஜராத்தில் உள்ள படேல் சமூகத்தினரை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பெரு நிறுவனங்களையே படேல் சமூகத்தினர் தங்கள் அயராத உழைப்பாலும், முனைப்பான தொழில் திறனாலும் பின்தங்க வைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வாதிடுபவர்கள். இப்போதுள்ள சில்லறை வியாபாரிகள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்கியுள்ள, நல்கிவரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்.
முதலாவதாக, மாநகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரை பல்வேறு அடுக்குகளாக சில்லறை வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது. இது பொருளாதாரப் பரவல் முறை சார்ந்ததாகும். விவசாயத்திற்கு அடுத்த நிலையில் இது உள்ளது.
இரண்டாவதாக, மொத்த வியாபாரத்தில் சில்லறை வியாபாரத்தின் பங்கு 98 சதவீதமாக உள்ளது. இந்தியா முழுவதும் 1கோடியே 20 லட்சம் சில்லறைக் கடைகள் உள்ளன. பெரு நிறுவனகடைகள் 2% மட்டுமே உள்ளன.
மூன்றாவதாக, விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகுந்த வேலைவாய்ப்பு அளித்துள்ள துறை இதுதான். இதன் மூலம் 4 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் உலகிலேயே பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் என்று சொல்லப்படும் வால்மார்ட்டில் 5 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்திய நிலவரத்துடன் ஒப்பிடும் போது இது சொற்பமானதாகும்.
நான்காவதாக, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தகம், சுயவேலைவாய்ப்பு அளிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் அனைவரும் இதில் பங்கேற்று வருகிறார்கள். 12 கோடி குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இது உள்ளது.
ஐந்தாவதாக, இந்தியாவில் சில்லறை வர்த்தகம் குறிப்பிட்ட சில சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் சமூக மூலதனம் மேம்பாடு அடைகிறது.
ஆறாவதாக, இந்திய சில்லறை வர்த்தகம் திறந்தவெளிக் கலாசாலையாக விளங்குகிறது. பயிற்சியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் கிரகிக்கப்படுகின்ற அறிவை அவர்கள் தங்களிடையே பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஏழாவதாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வர்த்தகத்தின் பங்களிப்பு 14 சதவீதத்துக்கும் அதிகமாகும். முப்பை பங்கு மார்க்கட்டில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 4% மட்டுமே.
எட்டாவதாக, அமைப்பு சார்பற்ற சில்லறை வர்ததகம் ஆண்டுக்கு சராசரியாக 8% வளர்ச்சி கண்டுவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது 1999-2000லிருந்து 2006-07வரை இந்த நிலவரம்தான் காணப்பட்டது. கட்டுமானத் தொழிலில் 10% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இது உள்ளது.
மேற்கத்திய உலகுடன் தொடர்புடைய சில்லறை வர்த்தகம் பற்றிய சிந்தனை உடையவர்கள் மேற்கத்திய உலகுசாராத சில்லறை வர்த்தகம் பற்றி தெளிவில்லாதவர்களாக உள்ளனர். இந்தியாவில் சில்லறை வர்த்தகம் என்பது சமூக மூலதனம் சார்ந்தது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
குடும்பம் சார்ந்த சமுதாய உந்துதலால், சமூக மூலதனத்தால் செயல்பட்டு வரும் சில்லறை வர்த்தகத்தை ஜப்பான் நாடு இன்னமும் பாதுகாத்து வருகிறது. சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் முதல் கட்டமாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த போதிலும் அதன் பகாசுரத் தாக்கத்தைப் புரிந்துகொண்டு தங்கள் வர்த்தகத்தைப் காப்பாற்றத் தங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கி சட்டங்கள் இயற்றியுள்ளன. இதனால் வெளிநாட்டு மெகா மால்கள், ஹைபர் மார்க்கெட்டுகளின் பெருக்கத்தையும், அவற்றினால் தங்கள் தேசத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்படும் மோசமான விளைவுகளையும் கட்டுப்படுத்தியுள்ளன.
இந்தியக் கிராமங்களுக்கு இப்போதுள்ள சில்லறை வர்த்தக முறையே பொருத்தமானது. பெரு நிறுவனங்கள் மரபு சார்ந்த சில்லறை வியாபாரிகளின் உதவியின்றி குக்கிராமங்களை எட்ட முடியாது. பெரு நிறுவனங்களை இதில் முழுமூச்சில் ஈடுபட அனுமதித்தால் சில்லறை வர்த்தகம் படிப்படியாக நொறுங்கிவிடும். சமூகச் சமன்பாடு சீர்குலைந்துவிடும். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் சமூகச் சங்கிலி அறுந்துவிடும்.
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற முடிவு சரியானதல்ல. இது இந்தியாவில் வெற்றிபெறாது. நிச்சயமாக தோல்வியைச் சந்திக்கும். இதை அனுமதிப்பது இந்திய சில்லறை வர்த்தகத்திலும் சமூக மூலதனம் சார்ந்த சூழலிலும் பூகம்பங்களை ஏற்படுத்தும். சுனாமிகளை உருவாக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தால் லட்சோப லட்சம் பேர் வாழ்வாதாரங்களைப் பறிகொடுப்பார்கள். வேலை இழப்பும் அதிகரிக்கும். சமூகக் கட்டுக்கோப்பு உருக்குலையும். எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கோஷமான “ அனைவரையும் தழுவிய வளர்ச்சி” என்பதையே அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் இங்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து சமூகங்களைச் சார்ந்த சிறு வியாரிகளும், குறிப்பாக பிற்பட்ட சமூகத்தினரும் ஓரம்கட்டப்பட்டு விடுவார்கள்.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இது பற்றிய கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வற்புறுத்துகிறது. இதைச் செய்யத்தவறினால அரசின் இந்த முடிவை எதிர்த்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் உறுதியாகவும், வலுவாகவும் போராடும்.
சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்களை ஒருங்கிணைத்து தேசிய அலவில் போராட்டம் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் இப்பிரச்சினையை மக்களிடம் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கொண்டு செல்லும். வரும் தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்குமாறு வாக்காளர்களை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக்கொள்ளும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளையும், மார்க்சிஸ்ட் மற்றும் மற்ற கட்சிகளையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இப்பிரச்சினை தொடர்பாக அணுகும். இவ்விஷயத்தில் இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.
நன்றி: விஜயபாரதம் இதழ்.
எஸ்.குருமூர்த்தி இந்தியாவின் மதிப்பு மிக்க பொருளாதார, சட்ட நிபுணர் மற்றும் கட்டுரையாளர். பல புகழ்மிக்க நிறுவனங்களில் ஆலோசகராகப் பணியாற்றியவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (Swadeshi Jagaran Manch) தலைவரும் ஆவார்.

No comments: