Friday, June 20, 2008

இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்

இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினை எனப்படும்.
பொருளடக்கம்[
மறை]
1 நுகர்வினை
2 தொல் வினை
3 வரும் வினை
4 துணை நூல்கள்
நுகர்வினை
இது 'பிராரப்த கர்மம்' என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.
ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.
'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று
இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.

தொல் வினை
ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.
வரும் வினை
இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்'

தர்மம்

தர்மம் என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.
மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தர்மம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.
மனித ஆத்மா இறைவழியில் நடந்து உயர்
ஞானம் பெற்றிட அற வழியில் நடந்திடல் அவசியமானது. அறம் வலியுறுத்தும் திருவள்ளுவர், அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:
சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்
ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)
(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)
தர்ம வழியில் இருந்து பிறழுதலுக்கு அதர்மம் என்று வழங்கப்படுகிறது.

இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்


“இந்துமதம் தனக்கென்று பெயர் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு மதத்திற்கான இறுக்கமான வரையறைகளுக்குள் அது தன்னை அடக்கிக்கொள்ளவில்லை; அனைவரும் கட்டாயமாகப் பின்பற்றியே ஆகவேண்டிய மத ஆசாரம் என்று ஒன்றை அது முன்வைக்கவில்லை; எந்தத் தவறுகளும் இல்லாத, ஒரே உண்மை மதக்கொள்கை என்று ஒன்றை வைத்து அது சாதிக்கவில்லை; மோட்சத்திற்காக ஒரே ஒரு குறுகிய வழிப் பாதையையும், நுழைவாயிலையும் அது அமைத்து வைக்கவில்லை.
இந்துமதம் ஒரு மதக்குழுக் கலாசாரம் மட்டும் அல்ல, மாறாக பரம்பொருளை நோக்கிய மனித உயிரின் பரந்துபட்ட தேடல்களின் தொடர்ச்சியான உன்னத மரபு அது. சுய மேம்பாட்டிற்காகவும், சுய அறிதலுக்காகவும் பல பரிமாணங்களும், பல படித்தரங்களும் கொண்ட ஆன்மசாதனைகளை கட்டற்ற சுதந்திரத்துடன் அது அனுமதித்து வந்திருக்கிறது. அதனால் தான், ”சனாதன தர்மம்” (ஆதியும், அந்தமும் அற்ற தர்மம்) என்ற, தனக்கு முற்றிலும் உரிமையுள்ள பெயரிலேயே தன்னை அழைத்துக் கொண்டது”
-
India’s Rebirth (ISBN 2-902776-32-2) p 139
“சனாதன தர்மமே நம் தேசியம். இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்.”
- மே-6, 1909. உத்தரபாரா சொற்பொழிவு (Uttarpara Speech)

இந்து மதம் மிகப் பெரும் “ஐயங்களும், காரணத் தேடல்களும் கொண்ட” வழியாகவும், அதே சமயம் மிகப் பெரும் “மத நம்பிக்கை” வழியாகவும் திகழ்கிறது. அது ஒரு மாபெரும் “ஐயங்களின் வழி”, ஏனென்றால் வாழ்க்கையின் தீராப் புதிர்களைப் பற்றி அது இடையறாது கேள்விகள் கேட்டும், பரிசோதனைகள் செய்தும் வந்திருக்கிறது. மிக ஆழ்ந்த இறை அனுபவங்கள், மேல்நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறுவகைப் பட்ட ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதால் அது நம்பிக்கைகளின்பாற்பட்ட ஒரு மாபெரும் மதமும் ஆகும்.
அந்த அளவில் கூட, இந்துமதம் ஒரு இறுகிய மதக்கொள்கையோ அல்லது இத்தகைய மதக்கொள்கைகளின் தொகுப்போ அல்ல, ஆழ்ந்த வாழ்வியல் தரிசனம் அது. இந்துமதம் ஒரு இறுகிய சமூகக் கட்டமைப்பும் அல்ல, மாறாக கடந்தகாலம் மற்றும் வரும் காலங்களின் சமூக பரிணாம வளர்ச்சிப் பாதைகளுக்கான உந்துசக்தி. அது எதையும் ஒதுக்குவதில்லை, பரிசோதிக்கவும், அனுபவம் பெறவும் வலியுறுத்துகிறது. இப்படித் தொடர்ந்து பரிசோதித்து, அனுபூதியில் கண்டறியப்பட்டவற்றை அது ஆன்மீகப் பயன்பாட்டிற்காக வழிகாட்டுதல்களாக மாற்றி வருகிறது. எனவே, இந்துமதத்தில் தான் எதிர்காலத்தின் உலகளாவிய ஆன்மிக மதத்திற்கான அடிப்படைகளை நாம் காணமுடிகிறது.
இந்த சனாதன தர்மத்திற்குப் பல புனிதநூல்கள் இருக்கின்றன - வேதங்கள், உபநிஷதங்கள், கீதை, தரிசனங்கள், புராணங்கள், ஆகமங்கள், தந்திரங்கள்… ஆனால் அதன் உண்மையான, அனைத்தினும் மேலான புனிதநூல் உன் உள்ளம், (இந்துமதத்தின் படி) அழிவில்லாப் பரம்பொருளே அதில் உறைவதால்.”
- “கர்மயோகின்” என்ற நூலில்
நூற்றாண்டுகளின் பண்பட்ட பயிற்சியினால், மற்ற தேசங்களின் நாகரீகமிக்க மேட்டுக்குடியினரை விட, ஹிந்துஸ்தானத்தின் கல்வியறிவற்ற பொதுஜனங்கள் கூட ஆன்மிக உண்மைகளின் புரிதலுக்கு அருகில் இருக்கின்றனர்.
-
India’s Rebirth (ISBN 2-902776-32-2) p 140
“பாரதத்தின் பண்டைய முனிவர்கள் தங்கள் ஆன்ம பரிசோதனைகள் மற்றும் யோக சாதனைகள் மூலம் ஊனுடலை வென்று அதனைத் தாண்டிச் சென்றனர். வருங்கால மனிதகுலத்தின் அறிவுத் தேடலின் பாதையில், முனிவர்களின் பூரண ஞானமானது நியூட்டன் மற்றூம் கலிலியோவின் தீர்க்கதரிசனத்தை விடவும், பரிசோதனை மற்றும் காரண அறிவு சார்ந்த அறிவியல் முறைகளை விடவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை”.
- The Upanishads - By Sri Aurobindo vol. 12 p. 6.
“இந்திய சிந்தனையின் அனைத்து வாயில்களுக்குமான ஆதாரத் திறவுகோல் ஆன்மிகம். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அவற்றின் இயல்பான தன்மையை அளிப்பது அது தான். இந்த ஆன்மிக அக ஒளியே புற அளவில் இந்தியாவின் மதமாக, இந்து மதமாக மலர்ந்தது. மேலாம் பரம்பொருள் எல்லையற்றது என்று அறிந்த இந்து மனம், அந்த எல்லையற்ற பரம்பொருள் இயற்கையிலும், ஆன்மாவிலும், உலகெங்கும் தன்னை எல்லையற்ற விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்றும் உணர்ந்து கொண்டது.

நன்றி -தமிழ் இந்து இணையதளம் -

Thursday, June 19, 2008

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது.
இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் செடி கொடிகளும் விலங்குகளும் இறைத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன. ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் உபநிடத வரி அனைத்து உயிர்களிலும் பிரபஞ்சமெங்கும் இறைத்தன்மை வியாபித்திருப்பதைக் கூறுகிறது. இந்து தருமத்தின் மற்ற அனைத்து கோட்பாடுகளும் அழிந்து இந்த ஒரு வரி பிழைத்திருந்தால் இந்து தருமம் மீண்டும் பழைய செழுமையுடன் மீண்டு வந்திட இயலும் என்பார் மகாத்மா காந்தி. இந்து தருமத்தில் வனங்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.அதர்வ வேதத்தின் ‘பூமி வணக்கம்’ எனும் துதிப்பாடல் உலகின் மிகப்பழமையான சூழலியல் குறித்த ஆன்மநேய பிரகடனம் எனலாம்.
மனிதர்களிடையே பகைமை ஒழியட்டும். உயரங்கள் மேடுகள் சமதளங்கள் எல்லாம் யாருடையதோ பல்வேறு ஆற்றல்களுடைய மூலிகைகளை யார் தாங்குகிறாளோ அந்த பூமி நமக்கு பரந்த இடத்தை தரட்டும். நமது வாழ்வை வளமை நிறைந்ததாக ஆக்கட்டும். சமுத்திரங்களும் நதிகளும் இதர நீர் நிலைகளும் நிலைப்பெற்றுள்ளவளும், அனைத்து உயிர்களும் வாழ உறைவிடம் அளிப்பவளுமானவளும் நமக்கு உணவைத்தருவதும் தன்னில் பயிர்கள் நிரம்பிய வயல்களைக் கொண்டிருப்பவளுமானவளுமான பூமித்தாய் நமக்கு சிறந்த அறுவடையை அருளட்டும். பூமியின் நீர்வளங்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை அவை எல்லா திசைகளிலும் தங்கு தடையில்லாமல் இரவும் பகலும் பாலைப்போல பாயட்டும். பூமி தேவியே உன் மைந்தர்களாக உன்னில் வாழும் பலவித மனிதரும் நன்மை கொண்டவர்களாக தீங்கு இல்லாமல் வாழட்டும். உன்னை நான் தீங்கு செய்திடாமல் வாழ்வேனாக. உன்னிலிருந்து நான் எடுக்கும் வளங்கள் மீண்டும் உன்னில் விரைவில் உருவாகிட அருள்வாய் என்றெல்லாம் பூமித்தாய் வேதகால முனிவர்களால் வணங்கப்படுகிறாள்.
இந்துக்கள் வனங்களை மதித்தனர். அவற்றினை புனித இடங்களாகப் போற்றினர். தியானிக்க வனங்களையே தேர்ந்தெடுத்தனர், ஒருவர் தன் வாழ்க்கையின் இல்லறக்கடமைகளை முடித்த பின்னர் வனங்களுக்கு சென்று ஆன்மிக கடமைகளை மேற்கொள்வர். வாழ்க்கையின் இந்த நிலை வனப்பிரஸ்தம் என்றே அழைக்கப்படுகிறது. இந்து பாரம்பரியத்தில் மூன்று வித வனங்கள் கூறப்படுகின்றன. அவையாவன ஸ்ரீ வனம் - அதாவது பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் வனம், தபோவனம் - அதாவது ஆன்மிக சாதனையாளர்களின் தியானங்களுக்காக உருவாக்கப்படும் வனங்கள், மகாவனம் - அனைத்து உயிர்களும் தங்களுக்கு ஆபத்தில்லாத உறைவிடமாக தேர்ந்தெடுக்கும் வனங்கள். இந்த மூன்று வனங்களுமே பாதுகாக்கப்பட வேண்டிய வனங்களாகும். இந்து தருமம் வனங்களை தெய்வத்தன்மை கொண்டவையாக கருதுகிறது. இதன் விளைவாக பாரத தேசமெங்கும் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்ட தெய்வ வனங்கள் உள்ளன.
போபாலில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரீய மானவ் சங்கிரகாலயா எனும் அமைப்பு 4875 புனிதவனங்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றின் பரப்பளவு 39, 063 ஏக்கர்களாகும். ஆனால் இந்த கணக்கெடுப்பில் அடங்காமல் பல புனித வனங்கள் பாரதம் முழுவதும் உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனங்கள் கூட நலிவடைந்து வரும் இந்த காலகட்டதிலும் புனித வனங்களின் பரப்பளவு அப்படியே இருந்து வருகிறது என இந்திய வன நிர்வாகதுறையின் இயக்குநரே கூறுகிறார். இன்றைய தேதியில் கேரளாவிலும் 500ஹெக்டேருக்கு மேலாக 2000 நாக காவுகள் உள்ளன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவியலாளர்கள் 722 தனித்தனி பூ பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 304 காவுகள் இன்றும் உள்ளன. மிகச்சிறந்த மூலிகை செடிகள் கிடைக்கும் இடமாக இந்த காடுகள் அறியப்படுகின்றன. ஆனால் சூழலியல் உணர்வு என்பது இந்து தர்மத்தை பொறுத்தவரையில் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படுவதாகும்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் பி.எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்:
“எங்கும் ஒற்றைத்தன்மையே படர்ந்திருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் இயற்கையின் பன்மையை பாதுகாப்பது நமது நோக்கமா அல்லது நம் வாழ்விடத்திலேயே இயற்கையின் பன்மை திகழ வேண்டுமென நாம் விரும்புகிறோமா? பிந்தைய பார்வையே உயிர் மண்டலத்துக்கு (biosphere) வலு அளிக்கும் பார்வையாகும். அதுவே நம்மை பிரம்மத்தில் வேர் கொண்ட பிரபஞ்ச விருட்சம் எனும் கருத்தாக்கத்துக்கு அழைத்து வருகிறது. இதனையே நம் ஞானிகள் உபநிடதங்களில் கூறினார்கள். தத்வமஸி (நீ அதாகவே இருக்கிறாய்) என்பது ஒவ்வொரு தனிமனிதனும் பிரபஞ்ச சிருஷ்டியில் ஒரு அங்கம் என்பதனைக் காட்டுகிறது. எனவே மனித குலம் சுற்றுப்புற சூழலில் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகவும் அனைத்து உயிர்களிடமும் அன்பும் தயையும் கொண்டதாகவும் அமைய வழி கோலுகிறது. இதுவே புத்தத்தில் சர்வபூத தயை என கூறப்படுகிறது. ” (Ecology and Sustainable development பக்.183)
இந்து தருமத்தின் சுற்றுச்சூழல் சாதனைகளாக பலவற்றைக் குறிப்பிடலாம். சிலவற்றை இங்கே காண்போம்.
பத்ரி வனம்:
1993 இல் இமாலய சூழலியல் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பத்ரிநாத்தில் ஏற்படும் சூழலியல் மாசு குறித்து கவலையுற்றார்கள். பத்ரி நாத் கோவிலின் அர்ச்சகருடன் அதனைக் குறித்து பேசினார்கள். அர்ச்சகர் பத்ரிநாத்தின் மரங்கள் சிவனின் கேசங்களாக வர்ணிக்கப்படுவதை தம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எடுத்து சொல்லி மரங்கள் நடுவதை ஒரு புனிதப்பணியாக அங்கு புனிதப்பயணம் மேற்கொள்ளுபவர்க்ளுக்கு ஆக்கினார். முதலில் நட்ட மரக்கன்றுகள் யாவும் கடுமையான குளிரில் இறந்துவிட்டன என்றாலும் அடுத்ததாக அங்கேயே ஒரு மரக்கன்றுகளுக்கான நர்சரியை தொடங்கி அங்கே மிகவும் உயரமான இடங்களுக்கும் பக்தர்கள் சென்று மரக்கன்றுகளை நட்டனர். இன்று பத்ரி வனத்தை பாதுகாப்பது அங்கு செல்லும் புண்ணிய தீர்த்த யாத்திரைகாரர்களுக்கும் ஒரு புனிதகடமையாகியுள்ளது.
நிர்மால்ய உரம்:
இந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல் வரை - மட்க வைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு மண்ணிற்கு வளமளிக்கிறது. சிந்தியுங்கள். மும்பை பிரபாதேவி கோவிலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமைகளில் அது 200,000 ஆக அதிகரிக்கிறது. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஒரு நாளைக்கு சராசரி 120 கிலோ நிர்மால்யத்தினை உருவாக்குகிறது. செவ்வாய்கிழமை இது 200 கிலோ ஆகிறது. ஒரு மாதத்தில் 1000 கிலோ இயற்கை உரம் தயார். இறையருளுக்கு பாத்தியதையான மலர்களிலிருந்து கிடைக்கும் இந்த உரங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கிலோ உரம் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமோகமாக இவை விற்று அவை வந்த நாள் மதியமே தீர்ந்து விடுகின்றனவாம்.
இத்தனியார் திருக்கோவில்களின் டிரஸ்டிகளில் ஒருவரான சஞ்சய் பகவத் முந்தைய நாட்களை நினைவுகூர்கிறார். “அப்போதெல்லாம் முந்தைய நாட்களில் சுவாமிக்கு சார்த்திய மலரணிகள் (நிர்மால்யம்) அப்படியே குவியும். நகராட்சி குப்பை வண்டிகள் குப்பைக் கிடங்குகளில் தள்ளும். அது ஒன்றுதான் அவற்றினை நீக்கிடும் ஒரே வழி.” 2005 மே மாதத்தில் ‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ எனும் தன்னார்வ அமைப்பு கோவில் டிரஸ்டினை அணுகியது. “முதலில் டிரஸ்டிகள் மத உணர்வுகள், இடப்பற்றாக்குறை என்றெல்லாம் தயங்கினர், என்றாலும் நாங்கள் விளக்கிய போது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இப்போது இது மிக சுமுகமாக நடக்கிறது.” என்கிறார். இத்தன்னார்வ அமைப்பினைச் சார்ந்த பிரதிபா பேல்வல்கர். இப்போது நிர்மால்யா என்பதே இந்த இயற்கை உரத்தின் பெயர். பாக்டீரியங்கள் உள்ள மட்கிய உரக்கலவை இது. பூக்களிலுள்ள ஈரப்பதம் போக மரத்தூள் சேர்க்கப்படுகிறது. இந்த உயிரிக்கலவையின் உயிரிக்கூட்டம் ஆக்ஸிஜனுடன் 7-8 நாட்கள் வரை வினைபுரிகிறது. லிச்சேட் உருவாக்கத்தை தடுக்க தொடர்ந்து இது கலக்கப்பட வேண்டும். இது பின்னர் சூரிய ஒளியில் 1-2 நாட்கள் உலரவைக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. 35 நாட்களில் தரமான உரம் தயாராகிவிடும்.
ஏற்கனவே 2002 இல் மும்பை கிரஹக் பஞ்சாயத், பர்லேஸ்வர் திருக்கோவிலில் நிர்மால்யத்தினை உரமாக்கும் திருப்பணியில் பேல்வல்கர் வெற்றி அடைந்துள்ளார். எனவே சித்தி விநாயகர் கோவில் அதிகாரிகளை சம்மதிக்க வைப்பதில் அவருக்கு அத்தனை பிரச்சனை இல்லை என்றுதான் கூறவேணும். மும்பை எக்ஸல் தொழிற்சாலை நிர்மால்ய கொள்ளவினைக் குறைத்திட ஒரு இயந்திரத்தை வடிவமைத்து பர்லேஸ்வர் திருக்கோவிலுக்கு கொடுத்தது.கொள்ளவு குறைப்பு மூலம் மட்கும் நேரத்தினைக் குறைத்திட முடியும். சித்தி விநாயகர் கோவில் இதனை விலைக்கொடுத்தே வாங்கிக்கொண்டது. 15 நிமிட இயக்கம் மூலம் 60 சதவிகித கொள்ளவினைக் குறைத்திட இயலும். இது முழு நேரத்தினையும் குறைக்கிறது. 35 நாட்கள் ஆகிற நேரம் இங்கு 15 நாட்கள் ஆகிறது. திருப்பதி, ஷீரடி ஆகிய கோவில்களுக்கும் இந்நிர்மால்ய உர உற்பத்தியை விரிவாக்க பேல்வல்கர் திட்டமிடுகிறார்.
நம் ஊர் கோவில்களிலும் இவ்வாறு கோவிலுக்கு ஒரு உர உற்பத்தி மையம் தொடங்கினால் என்ன?
[நன்றி: 'Down to Earth' நவம்பர்-30,2005 மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் : டிசம்பர் 14-2005]
வெட்டி முறிச்சான் அம்மன் கோவில
தேசிய நெடுஞ்சாலை 47 இல் கன்னியாகுமரிக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்திருக்கிறது வெட்டி முறிச்சான் அம்மன் கோவில். அந்த தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து வரும் பாதையில் அந்த பகுதியில் நெடுந்துயர்ந்த ஆலமரங்களைப் பார்க்க முடியும். முன்பு அரசாங்கம் இந்த மரங்களை வெட்டி பாதை போட முயன்றது. அதனை அந்த வட்டார மக்கள் எதிர்த்தனர். எனவே காவல் துறை உதவியுடன் வெளியூர் ஆட்களைக் கொண்டு அந்த மரத்தினை வெட்ட முயன்ற போது அந்த மரத்திலிருந்து இரத்தம் பீறிட உறைந்திருந்த அம்மன் உக்கிரமாக காவலர் தலைவர் முன் வெளிப்பட்டாள் என்றும் அதனைத் தொடர்ந்து அந்த மரங்களை வெட்டாமல் சாலை அமைக்கப்பட்டது என்பது ஐதீகம். அந்த ஐதீகத்துக்கு சான்றாக இன்றும் அங்கு நல்ல குளிர் தரும் அம்மரங்கள் நிற்கின்றன. மரத்தை வெட்டுவதை தடுத்தமையால் அந்த அம்மனுக்கு வெட்டி முறிச்சான் அம்மன் என்று பெயர். இந்த சூழலியலுக்கு பொருந்தும் நிகழ்ச்சியை சுதை சிற்பமாகவும் செய்து வைத்துள்ளனர் பக்தர்கள்.
விவசாயிகளை வாழவைக்கும் பஞ்சகவ்யம்:
இயற்கை விவசாய விஞ்ஞானி டாக்டர் நடராஜன் மாசி மாத மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில் சென்றிருந்தார். அவரது வார்த்தைகளில்“அந்த இரவு எங்கள் ஊர் திருப்பாண்டி கொடுமுடி ஈசனைத் தரிசிக்க சென்றேன். அங்கே அவன் திருவடிகளில் அந்த அற்புதம் சித்து விளையாட்டு நடந்தது. பூசைக்குப் பின் பஞ்சகவ்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நானும் சும்மா இராமல் எங்கள் குருக்கள் அய்யரைப் பார்த்து “என்ன சுவாமிகளே இந்த பஞ்சகவ்யத்தால் என்ன பலன்” என்று கேட்டேன். அவரும் இரத்தின சுருக்கமாக “இது வந்த நோயைப் போக்கும். இனிமேல் வரப்போகும் நோய்களை வராமல் தடுக்கும்.” என்று வெகு அழகாக சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இது அவர் சொல்லவில்லை! எனை ஆட்கொண்ட அந்த ஈசனே அவர் உருவில் சொன்னார் என்றே இன்றும் நான் நம்புகிறேன்.. அவர் சொன்ன வேளையில் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த பிரேசில் காரர் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாரே நாம் ஏன் பஞ்சாட்சரம் போன்ற இந்த பஞ்சகவ்யத்தின் ஐந்து பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என எண்ணினேன். அதன் விளைவே நம் பஞ்சத்தையும் பிணியையும் போக்க வந்துள்ள இந்த பஞ்சகவ்யா எனும் மாருந்தாகும். இது பயிர்களுக்கு விருந்தாகும்.”
தமிழ்நாட்டு தலவிருட்சங்கள் சில:
கபாலீஸ்வரர் கோவில், சென்னை - புன்நாகம்ஆலங்காட்டப்பர் கோவில் - திருவள்ளுவர் மாவட்டம் - வடவிருட்சம்மருத்தீஸ்வரர் கோவில் - காஞ்சி புரம் - வன்னி (ஷாமி) மரம்அண்ணாமலை ஈஸ்வரர் - திருவண்ணாமலை - பகுல மரம்மருத்துவனார் கோவில் - தஞ்சாவூர் மாவட்டம் - அர்ஜுன மரம்திருமேனிநாதர் - விருதுநகர் மாவட்டம் - அஸ்வத மரம்வேளப்பர் கோவில் - தேனி மாவட்டம் - மாமரம்ராமநாதர் கோவில் - ராமநாதபுரம் மாவட்டம் - வில்வம்அவிநாசி லிங்கேஸ்வரர் - கோவை மாவட்டம் - புடலைஅங்காள ஈஸ்வரி - கிருஷ்ண கிரி மாவட்டம் - வேம்புஅர்த்தநாரீஸ்வரர் - நாமக்கல் மாவட்டம் - இலுப்பைசொக்கநாதர் - மதுரை மாவட்டம் - கதம்ப மரம்வைகுண்டநாதர் - தூத்துக்குடி மாவட்டம் - பாரிஜாதம்நாகராஜர் - கன்னியாகுமரி மாவட்டம் - நாகலிங்கம்ஸ்தாணுமாலைய சுவாமி கோவில் - கன்னியாகுமரி மாவட்டம் - கொன்றை

Monday, June 16, 2008

உலகில் அமைதி நிலவும்

எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ
அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்!
எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ

அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்!
எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ

அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும்!
எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ

அப்போது உலகில் அமைதி நிலவும்!

Tuesday, June 3, 2008

ஆன்மீக இளைஞர் பேரவை- மணக்காடு








ஓம்








ஆன்மீக இளைஞர் பேரவை




அகிலம் செழிக்க!
ஆன்மீக வழியில் !
ஒன்றுபடுவோம்!