Friday, June 20, 2008

இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்


“இந்துமதம் தனக்கென்று பெயர் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு மதத்திற்கான இறுக்கமான வரையறைகளுக்குள் அது தன்னை அடக்கிக்கொள்ளவில்லை; அனைவரும் கட்டாயமாகப் பின்பற்றியே ஆகவேண்டிய மத ஆசாரம் என்று ஒன்றை அது முன்வைக்கவில்லை; எந்தத் தவறுகளும் இல்லாத, ஒரே உண்மை மதக்கொள்கை என்று ஒன்றை வைத்து அது சாதிக்கவில்லை; மோட்சத்திற்காக ஒரே ஒரு குறுகிய வழிப் பாதையையும், நுழைவாயிலையும் அது அமைத்து வைக்கவில்லை.
இந்துமதம் ஒரு மதக்குழுக் கலாசாரம் மட்டும் அல்ல, மாறாக பரம்பொருளை நோக்கிய மனித உயிரின் பரந்துபட்ட தேடல்களின் தொடர்ச்சியான உன்னத மரபு அது. சுய மேம்பாட்டிற்காகவும், சுய அறிதலுக்காகவும் பல பரிமாணங்களும், பல படித்தரங்களும் கொண்ட ஆன்மசாதனைகளை கட்டற்ற சுதந்திரத்துடன் அது அனுமதித்து வந்திருக்கிறது. அதனால் தான், ”சனாதன தர்மம்” (ஆதியும், அந்தமும் அற்ற தர்மம்) என்ற, தனக்கு முற்றிலும் உரிமையுள்ள பெயரிலேயே தன்னை அழைத்துக் கொண்டது”
-
India’s Rebirth (ISBN 2-902776-32-2) p 139
“சனாதன தர்மமே நம் தேசியம். இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்.”
- மே-6, 1909. உத்தரபாரா சொற்பொழிவு (Uttarpara Speech)

இந்து மதம் மிகப் பெரும் “ஐயங்களும், காரணத் தேடல்களும் கொண்ட” வழியாகவும், அதே சமயம் மிகப் பெரும் “மத நம்பிக்கை” வழியாகவும் திகழ்கிறது. அது ஒரு மாபெரும் “ஐயங்களின் வழி”, ஏனென்றால் வாழ்க்கையின் தீராப் புதிர்களைப் பற்றி அது இடையறாது கேள்விகள் கேட்டும், பரிசோதனைகள் செய்தும் வந்திருக்கிறது. மிக ஆழ்ந்த இறை அனுபவங்கள், மேல்நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறுவகைப் பட்ட ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதால் அது நம்பிக்கைகளின்பாற்பட்ட ஒரு மாபெரும் மதமும் ஆகும்.
அந்த அளவில் கூட, இந்துமதம் ஒரு இறுகிய மதக்கொள்கையோ அல்லது இத்தகைய மதக்கொள்கைகளின் தொகுப்போ அல்ல, ஆழ்ந்த வாழ்வியல் தரிசனம் அது. இந்துமதம் ஒரு இறுகிய சமூகக் கட்டமைப்பும் அல்ல, மாறாக கடந்தகாலம் மற்றும் வரும் காலங்களின் சமூக பரிணாம வளர்ச்சிப் பாதைகளுக்கான உந்துசக்தி. அது எதையும் ஒதுக்குவதில்லை, பரிசோதிக்கவும், அனுபவம் பெறவும் வலியுறுத்துகிறது. இப்படித் தொடர்ந்து பரிசோதித்து, அனுபூதியில் கண்டறியப்பட்டவற்றை அது ஆன்மீகப் பயன்பாட்டிற்காக வழிகாட்டுதல்களாக மாற்றி வருகிறது. எனவே, இந்துமதத்தில் தான் எதிர்காலத்தின் உலகளாவிய ஆன்மிக மதத்திற்கான அடிப்படைகளை நாம் காணமுடிகிறது.
இந்த சனாதன தர்மத்திற்குப் பல புனிதநூல்கள் இருக்கின்றன - வேதங்கள், உபநிஷதங்கள், கீதை, தரிசனங்கள், புராணங்கள், ஆகமங்கள், தந்திரங்கள்… ஆனால் அதன் உண்மையான, அனைத்தினும் மேலான புனிதநூல் உன் உள்ளம், (இந்துமதத்தின் படி) அழிவில்லாப் பரம்பொருளே அதில் உறைவதால்.”
- “கர்மயோகின்” என்ற நூலில்
நூற்றாண்டுகளின் பண்பட்ட பயிற்சியினால், மற்ற தேசங்களின் நாகரீகமிக்க மேட்டுக்குடியினரை விட, ஹிந்துஸ்தானத்தின் கல்வியறிவற்ற பொதுஜனங்கள் கூட ஆன்மிக உண்மைகளின் புரிதலுக்கு அருகில் இருக்கின்றனர்.
-
India’s Rebirth (ISBN 2-902776-32-2) p 140
“பாரதத்தின் பண்டைய முனிவர்கள் தங்கள் ஆன்ம பரிசோதனைகள் மற்றும் யோக சாதனைகள் மூலம் ஊனுடலை வென்று அதனைத் தாண்டிச் சென்றனர். வருங்கால மனிதகுலத்தின் அறிவுத் தேடலின் பாதையில், முனிவர்களின் பூரண ஞானமானது நியூட்டன் மற்றூம் கலிலியோவின் தீர்க்கதரிசனத்தை விடவும், பரிசோதனை மற்றும் காரண அறிவு சார்ந்த அறிவியல் முறைகளை விடவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை”.
- The Upanishads - By Sri Aurobindo vol. 12 p. 6.
“இந்திய சிந்தனையின் அனைத்து வாயில்களுக்குமான ஆதாரத் திறவுகோல் ஆன்மிகம். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அவற்றின் இயல்பான தன்மையை அளிப்பது அது தான். இந்த ஆன்மிக அக ஒளியே புற அளவில் இந்தியாவின் மதமாக, இந்து மதமாக மலர்ந்தது. மேலாம் பரம்பொருள் எல்லையற்றது என்று அறிந்த இந்து மனம், அந்த எல்லையற்ற பரம்பொருள் இயற்கையிலும், ஆன்மாவிலும், உலகெங்கும் தன்னை எல்லையற்ற விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்றும் உணர்ந்து கொண்டது.

நன்றி -தமிழ் இந்து இணையதளம் -

No comments: